குழந்தை மீட்பே குறிக்கோள் என்று குழந்தை சுஜித் மீட்பு தொடர்பாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 60 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரை பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் நேரடியாகக் களத்தில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருவதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சுஜித்தை மீட்க, ரிக் இயந்திரங்கள் மூலமாகக் குழிதோண்டி காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், இடையே பாறையாக இருப்பதாக அந்த இயந்திரங்களால் நினைத்த மாதிரி குழி தோண்ட முடியவில்லை. இதனால், சுஜித்தைக் காப்பாற்றும் முயற்சியில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த மீட்புப் போராட்டம் தொடர்பாகப் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், "குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன். அரசு இயந்திரத்தையோ, ஆழ்துளை இயந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை. குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண் சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்" என்று தெரிவித்துள்ளார்.