தமிழ் சினிமா

’கைதி 2’ தயாராகிறது: உறுதி செய்த கார்த்தி

செய்திப்பிரிவு

’கைதி 2’ படம் தயாராகவுள்ளதை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி உறுதி செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், திரையரங்குகள் குறைவு என்பதால் தமிழகத்தில் முதல் நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தின் மேக்கிங், ஒளிப்பதிவு, கார்த்தியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என அனைத்தையுமே பாராட்டி வருகிறார்கள். மேலும், இன்று (அக்டோபர் 26) காலை தனது ட்விட்டர் பதிவில் லோகேஷ் கனகராஜ் "'கைதி' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ரசித்து வேலை பார்த்தேன்.

கண்டிப்பாக அதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் கார்த்தி சார் இருவரும் தந்த இந்த வாய்ப்புக்கு நன்றி. உங்களுடைய அனைத்து மெசேஜ்களுக்கும் போன் கால்களுக்குமான பதில் ஆம். 'டில்லி மீண்டும் வருவார்'" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'கைதி' படத்தின் 2-ம் பாகம் வெளியாவது உறுதியானது.

இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கார்த்தி பேசும் போது 'கைதி' 2-ம் பாகம் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி, "10 ஆண்டுகளாக வாழ்க்கையைத் தொலைத்தவன் டில்லி. அவனுக்கு வாழ்க்கையில் எந்தவொரு விஷயமே இல்லை. எதைப் பிடித்துக் கொண்டு வாழ முடியும். அவனுக்கு ஏதோ ஒரு விஷயம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதற்காகப் பட்டை போட்டுக் கொண்டு வாழ்கிறான். எனக்கும் கடவுள் நம்பிக்கையுண்டு. கோயிலுக்கு எல்லாம் போகவில்லை என்றாலும், தினமும் காலையில் நெற்றியில் திருநீர் இல்லாமல் வெளியே செல்வதில்லை.

இந்தப் படத்துக்காக லாரி ஓட்டியதை மறக்கவே முடியாது. அதுவொரு ஆபத்தான அனுபவம். தூங்காமல் லாரி ஓட்டிக் கொண்டே இருக்கும் அனைத்து டிரைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். 'கைதி' படத்தில் எனது பின்புலக் கதை ஒரு நிஜச் செய்தியாகும்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொலைபேசியில் பேசினார். 30 நாட்கள் மட்டும் தேதிகள் கொடுத்தால் 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவதாகத் தெரிவித்தார். கதையும் தயாராக இருக்கிறது என்றார்" என்று கார்த்தி பேசினார்.

SCROLL FOR NEXT