தமிழ் சினிமா

விஜய்யின் 'பிகில்' முதல் நாள் வசூல் நிலவரங்கள் மற்றும் சாதனைகள்

செய்திப்பிரிவு

விஜய் நடித்த 'பிகில்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. மேலும், சில இடங்களில் வசூலில் சாதனையும் படைத்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நேற்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ள படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா, யோகி பாபு, வர்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாள் வசூல் 25.60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பார்த்தால் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களையும் விஜய்யே கைப்பற்றியுள்ளார். 'சர்கார்', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

அதே போல், தெலுங்கில் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்களின் வரிசையில் இதுவே அதிகமாகும். சென்னையில் முதல் நாளில் 1.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 'பிகில்'. 2019-ம் ஆண்டு வெளியான படங்களின் முதல் நாள் சென்னை வசூலில் இதுவே அதிகமாகும்.

விஜய் படங்களில் 'சர்கார்' படத்துக்குப் பிறகு இருக்கிறது 'பிகில்' படத்தின் முதல் நாள் சென்னை வசூல். சென்னை வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது '2.0'. அதன் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அமெரிக்க வசூலில் 500K டாலர்கள் வசூல் செய்துள்ளது 'பிகில்'. வரும் நாட்களில் 1 மில்லியன் டாலரைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது 'பிகில்'. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இதேபோன்றதொரு நிலை வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 28) வரை தொடர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT