விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சிங்கர் 7’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மேனன் நடுவர்களாக இருந்து வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியை, மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
கடைசியாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முருகன், புண்யா மற்றும் விக்ரம் ஆகிய மூவரும் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர். சாம் விஷால் மற்றும் கெளதம் இருவரில் யார் இறுதிப்போட்டிக்குச் செல்வது என்பது மக்கள் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, மக்கள் யாருக்கு அதிகமாக வாக்களித்துள்ளார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவர்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 26) வைல்டு கார்டு சுற்று ஒளிபரப்பாக உள்ளது. இதில், போட்டியின் இடையில் ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வைல்டு கார்டு சுற்று, இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதலாவது, மூன்று போட்டியாளர்களுக்குத் தலா ஒரு நிமிடம் பாடுவதற்குத் தரப்படும். அதற்குள் சிறப்பாகப் பாடும் இரண்டு போட்டியாளர்கள், வைல்டு கார்டு சுற்றின் இரண்டாவது பிரிவுக்குத் தகுதி பெறுவர். அதில் சிறப்பாகப் பாடும் ஒருவர் அல்லது இரண்டு பேர் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி, இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் முதலில் ரோஷிணி, பூர்ணிமா, சுகந்தி ஆகிய மூவரும் பாடினர். அதில், ரோஷிணி மற்றும் பூர்ணிமா இருவரும் அடுத்தகட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்ததாக, வைசாகன், ஷிவாங்கி, கண்ணகி மூவரும் போட்டியிட்டனர். அதில், கண்ணகி மற்றும் ஷிவாங்கி இருவரும் வைல்டு கார்டு இரண்டாவது பிரிவுக்குத் தகுதி பெற்றனர்.
அதற்கடுத்து, பார்த்திபன், சஹானா, முஃபீதா ஆகிய மூவரும் பாடினர். அதில், பார்த்திபன் மற்றும் சஹானா இருவரும் அடுத்தகட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட சாம் விஷால் மற்றும் கெளதம் இருவருக்கும் சேர்த்து மக்கள் அளித்த மொத்த வாக்குகள் 61,22,421. அதில், 41,46,085 வாக்குகள் பெற்று சாம் விஷால் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
19,76,336 வாக்குகள் பெற்ற கெளதம், வைல்டு கார்டு இரண்டாவது பிரிவுக்குத் தகுதியான 6 பேருடன் இணைந்து போட்டியிடுகிறார். இந்த 7 பேரில் இருந்து ஒருவரோ அல்லது இருவரோ இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்த நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 27) ஒளிபரப்பாகும். இதில், இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார்.
வைல்டு கார்டு சுற்றில், கல்பனா, அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, ராகுல் நம்பியார், சக்திஸ்ரீ கோபாலன், ஹரிச்சரண் ஆகிய 6 பேரும் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை வழிநடத்தினர்.