நெஞ்சம் பதைபதைக்கிறது என்று சுஜித் மீட்பு விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் கருத்துத் தெரிவித்துள்ளார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று (அக்டோபர் 25) மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தகவல் அறிந்து பல்வேறு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் எனச் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
ஆனால், அப்பணிகளின்போது 26 அடியிலிருந்த சுஜித் 70 அடிக்குச் சென்றுவிட்டான். இதனால் மீட்புப் பணி தாமதமாகி வருகிறது. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையும் வந்து சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில், "திருச்சி நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 5 மணிநேரமாக மீட்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தைக்காக வேண்டுவோம். 'அறம்' போன்ற திரைப்படங்கள் இந்தப் பிரச்சினையை வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை இந்நிகழ்வு காட்டுகிறது. 7 மணிநேரமாக மீட்புப் பணி தொடர்கிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது.. விரைவில் மீட்கப்படவேண்டும் இறைவா” என்று தெரிவித்துள்ளார்.
சேரன், விவேக் தொடங்கி பல்வேறு தமிழ்த் திரையுலகினரும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் சுஜித்தை மீட்க பதிவுகளை வெளியிட்டுள்ளனர். மேலும், #prayforsurjith, #savesurjeet உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.