தமிழ் சினிமா

'கைதி’ 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு: லோகேஷ் கனகராஜ் சூசகம்

செய்திப்பிரிவு

'கைதி’ 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதை, தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கைதி'. நேற்று (அக்டோபர் 25) வெளியான இந்தப் படம் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், குறைந்தள அவிலான திரையரங்கிலேயே படத்தை வெளியிட்டு இருப்பதால் வசூல் ரீதியாக எப்படி என்பது விரைவில் தெரியவரும்.

எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தின் மேக்கிங், ஒளிப்பதிவு, கார்த்தியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என அனைத்தையுமே பாராட்டி வருகிறார்கள். கார்த்தியின் கதாபாத்திரமான டில்லியின் முன்கதையைப் படமாக்க வேண்டும் என்றும், டில்லி கதாபாத்திரம் தொடருமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்நிலையில் 'கைதி' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், "உங்கள் அனைவரது பாராட்டுக்கும் நன்றி. 'கைதி' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ரசித்து வேலை பார்த்தேன். கண்டிப்பாக அதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் கார்த்தி சார் இருவரும் தந்த இந்த வாய்ப்புக்கு நன்றி. உங்களுடைய அனைத்து மெசேஜ்களுக்கும் போன் கால்களுக்குமான பதில் ஆம். 'டில்லி மீண்டும் வருவார்'" என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இந்தப் பதிவின் மூலம் 'கைதி' 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது தெளிவாகிறது.

SCROLL FOR NEXT