தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. தாணு தயாரிப்பில் அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வியாபாரம் 100 கோடியைக் கடந்துள்ளது, தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் சாதனைப் புரிந்தது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு தமிழ் திரையுலகினரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். மேலும், தெலுங்கு திரையுலகிலிருந்தும், இந்தி திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் 'அசுரன்' பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் "’அசுரன்’ தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
'அசுரன்' தெலுங்கு பதிப்பின் இயக்குநர் யார் என்பதை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.