தமிழ் சினிமா

உதயநிதியுடன் இணைந்த பிரசன்னா, ஸ்ரீகாந்த்

செய்திப்பிரிவு

உதயநிதி நடித்துவரும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில், அவருடன் பிரசன்னா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்தார். உதயநிதி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதினார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி. ஆனால், இடையில் மக்களவைத் தேர்தல் வந்ததால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் கவனம் செலுத்தினார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட உதயநிதி, முதலில் ‘சைக்கோ’ படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இதை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. தன்னுடைய முந்தைய படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் போலவே இதையும் த்ரில்லர் பாணியில் உருவாக்கி வருகிறார் மாறன். ஆத்மிகா, பூமிகா, சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரசன்னா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். சமீப காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் பிரசன்னா நடித்து வருவதால், இந்தப் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் உதயநிதி. ‘தடம்’ படத்தைப் போலவே இதுவும் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதில், உதயநிதி ஜோடியாக மேகா ஆகாஷை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT