'கைதி' படத்தை விஜய் பார்த்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'கைதி' தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருந்தார். நாளை (அக்டோபர் 25) படம் வெளியாகவுள்ள சமயத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.
அச்சந்திப்பில் அவர் பேசியதாவது:
'' 'கைதி' படம் தொடங்கப்பட்ட போதே நாயகி தேவைப்படவில்லை. அதைக் கதைதான் முடிவு செய்தது. நாயகி, பாடல் இல்லை என்பது படம் முடிந்தவுடன்தான் உணர்வீர்கள். இந்தப் படத்தில் உள்ள விஷயங்கள் எதையுமே பகலில் காட்ட முடியாது. அதனால்தான் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். இரவில் நடக்கும் கதைகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எமோஷன், ஆக்ஷன், மாஸ் என அனைத்தையும் யதார்த்தமாக இந்தப் படத்தில் கார்த்தி கேரக்டரில் பார்க்கலாம்.
முழுக்க முழுக்க நம்ப முடியாத விஷயங்கள்தான் 'கைதி'. அதை எந்த அளவுக்கு நம்ப வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம். கார்த்தி சாருடைய கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களைப் பார்க்கலாம். இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட் வைப்போம். காலை 5 மணி வரை போகும். கார்த்தி சாருடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது.
பேப்பரில் வந்த ஒரு சிறு செய்தியை வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். மேலும், 'விருமாண்டி' மற்றும் 'டை ஹார்ட்' ஆகிய படங்கள் தான் இதற்கு இன்ஸ்பிரேஷன். ஏனென்றால் 'விருமாண்டி' படத்தில் கமல் சாருடைய கதாபாத்திரமும், 'டை ஹார்ட்' படத்தின் திரைக்கதை வடிவமைப்பும் இந்தப் படத்தில் இருக்கும். இந்தப் படத்தின் கதைக்காக, ஜெயிலிலிருந்து வெளியே வந்த சில கைதிகளைச் சந்தித்து, எனக்குத் தேவையான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ரொம்ப ரத்தம் தெறிக்கிற மாதிரியான சண்டைக் காட்சிகள் இருக்காது. சந்தோஷமாகப் பார்க்கக் கூடிய சண்டைக் காட்சிகளாகவே இருக்கும்.
'பிகில்', 'கைதி' ஆகிய இரண்டு படங்களும் ஜெயிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படித்தான் பார்க்கிறேன். போட்டியெல்லாம் ஒன்றுமில்லை. விஜய் சார் இன்னும் 'கைதி' பார்க்கவில்லை. என் தயாரிப்பாளர்கள் கூட இன்னும் படம் பார்க்கவில்லை. இன்று மாலைதான் பார்க்கிறார்கள்.
'தளபதி 64' படத்தைப் பற்றி பலரும் கேள்வி கேட்டார்கள். இப்போதுதான் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது என்பதால் ரொம்பப் பேச முடியாது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிறையப் பேசலாம்''.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.