தமிழ் சினிமா

'ஆடை' இந்தி ரீமேக் வதந்தி: படக்குழுவினர் விளக்கம்

செய்திப்பிரிவு

'ஆடை' படத்தின் இந்தி ரீமேக் வதந்தி தொடர்பாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்

இந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வெளியான படம் 'ஆடை'. ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விவேக் பிரசன்னா, வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன. ஏனென்றால், இந்தப் படத்தில் அமலாபால் பிரதான காட்சிகள் பலவற்றில் ஆடையின்றி நடித்திருந்தார். தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார்.

இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அருண் பாண்டியன் வைத்துள்ளார். அவர் இந்தி திரையுலகில் உள்ள முன்னணி நிறுவனத்துடன் கைகோத்து ரீமேக் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு அருண் பாண்டியனின் 'ஏ&பி குரூப்ஸ்' நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமர்சகர்களால் பாராட்டப்பட்ட 'ஆடை' படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல நட்சத்திரத்தை வைத்து எடுக்கவிருக்கிறோம். இந்தப் படத்தில் நடிக்க கங்கணா ரணாவத்தை நாங்கள் அணுகவில்லை. இதுகுறித்துப் பரவும் செய்திகள் பொய்யானவை. இயக்குநர் உள்ளிட்ட மற்ற குழுவினரும் இறுதி செய்யப்படவில்லை. தயவுசெய்து மேற்கொண்டு வதந்திகளைத் தவிர்க்கவும்" என்று தெரிவித்துள்ளது ஏபி நிறுவனம்.

SCROLL FOR NEXT