இசைக்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் செயலியான ஜியோ சாவனில் தமிழ்ப் பாடல்களைக் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை எந்த மாதிரியான பாடல்கள் அதிகம் கேட்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ள சாவன், பிராந்திய மொழி இசை, செயலியில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பாடல்களில் 20 சதவீதத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்த் திரையிசை கேட்பது, கடந்த ஆண்டை விட 272 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 188.28 மில்லியன் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தமிழ்ப் பாடல்கள் இந்த வருடம் 702.4 மில்லியன் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களாக ரஹ்மான் இசையில் 'பிகில்' படத்தில் விஜய் பாடியிருக்கும் வெறித்தனம் பாடல் முதலிடத்திலும், ’மாரி 2’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தனுஷ் - தீ பாடியிருக்கும் ரௌடி பேபி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
வழக்கமாக இசையமைப்பாளர்களை வைத்தே நிறையப் பாடல்கள் தேடப்படும். ஆனால் இம்முறை சித் ஸ்ரீராம் பெயரை வைத்து நிறையப் பாடல்கள் தேடப்பட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இச்செயலியில் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர் என்ற பட்டியலில் ரஹ்மான், அனிருத்தைத் தொடர்ந்து சித் ஸ்ரீராம் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.
சென்னை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக பயனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தியுள்ளனர். தேசிய அளவில் அர்ஜித் சிங், அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞராக உள்ளார்.