தமிழ் சினிமா

துருவ் விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்தேன்: விக்ரம் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

துருவ் விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்தேன் என்று 'ஆதித்ய வர்மா' இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரேகட்டமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, நவம்பர் 8-ம் தேதி 'ஆதித்ய வர்மா' வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 22) காலை சென்னையில் நடைபெற்றது. இதில் விக்ரம் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும், தயாரிப்பாளர் தாணு, ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

தன் மகன் துருவ் விக்ரம் பேச்சுக்குப் பிறகு மேடையேறி விக்ரம் பேசும் போது, "பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டுக் கூட இந்த அளவுக்கு டென்ஷனாக இருந்ததில்லை. 'சேது' வெளியானபோது கூட டென்ஷனாக உணர்ந்ததில்லை. ஆனால், இன்று ரொம்ப டென்ஷனாக இருக்கிறது. இதுவொரு கல்யாணம் மாதிரி. என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுத்தேனோ, அப்படி என் மகனும் நல்லபடியாக வர வேண்டும் என்ற எண்ணம்தான்.

அவன் நடிகரா, இயக்குநரா என்று எதுவுமே சொன்னதில்லை. உனக்கு என்ன வேணுமோ பண்ணு என்றுதான் சொன்னேன். ஆனால் இறுதியாக சினிமாதான் என்றவுடன் சந்தோஷமாக இருந்தது. அதன் தொடக்கத்துக்கு ஒரு நல்ல கதை தேவை. 'அர்ஜுன் ரெட்டி' ரிலீஸுக்கு முன்பே ரீமேக் உரிமையை முகேஷ் சார் வாங்கிவிட்டார். அந்தப் படத்தை அவ்வளவு நம்பினார். நிறைய நடிகர்கள் நடிப்பதற்கு அவரை அணுகினார்கள். ஆனால், அவரோ துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றைப் பார்த்து நம்பிக்கை வைத்து நடிக்க வைத்தார்.

அவர் என்னிடம் கேட்டபோது, ஷாக்காக இருந்தது. ஏனென்றால், 5 வருடங்கள் கழித்து நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். 'அர்ஜுன் ரெட்டி' பார்த்தவுடனே பயந்துவிட்டேன். ஏனென்றால் ரொம்ப வலுவான கதாபாத்திரம், நிறைய கேரக்டர் மாற்றம் என இருந்தது. துருவ் வயதுக்கு இது சரியா, மெச்சூரிட்டி இருக்குமா என பயந்தேன். அவன் எப்படி நடித்திருக்கிறான் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

இந்தக் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும், இவ்வளவுதான் தேவை என்று முடிவு செய்து இயக்கியுள்ளார் கிரிசாய்யா. நானும் இந்தப் படத்தில் உதவி இயக்குநர் மாதிரிதான். துருவ்விடம் உன்னுடைய கனவை மட்டும் பார். அது என்ன சொல்லுதோ, அதை மட்டும் பண்ணு என்பேன். இந்தப் படத்தில் துருவ்வுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி.

அனைத்து அப்பாக்களுக்குமே பசங்களுக்கு ஏதாவது வீடு கொடுக்கணும், பொருள் கொடுக்கணும் என நினைப்பார்கள். ஆனால், நான் அவருக்கு என் ரசிகர்களைக் கொடுத்துள்ளேன். இங்கு என் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியாகத்தான் பண்ணுவான். தனித்தனியாகப் பண்ண மாட்டான். அந்த அளவுக்குக் கதாபாத்திரத்துக்குள் சென்றுவிட்டான். சில காட்சிகளில் அவனது நடிப்பைப் பார்த்து வியந்தேன்" என்று பேசினார் விக்ரம்.

SCROLL FOR NEXT