என் அப்பாவை பெருமைப்படுத்த நினைக்கிறேன் என்று 'ஆதித்ய வர்மா' இசை வெளியீட்டு விழாவில் துருவ் விக்ரம் பேசினார். அவரது பேச்சுக்கு விக்ரம் கண் கலங்கினார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, நவம்பர் 8-ம் தேதி 'ஆதித்ய வர்மா' வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 22) காலை சென்னையில் நடைபெற்றது. இதில் துருவ் விக்ரம் பேசும்போது, "இந்தப் படத்தில் நடிக்க உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னோட ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ பார்த்துவிட்டு, என்னை இந்த மேடைக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கு நன்றி. உங்களால் மட்டுமே இந்த மேடையில் நிற்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் செட்டுக்குள் போகும்போது நான் பேசவில்லை. ஆனால், இயக்குநர் கிரிசாய்யா போன்ற நல்லதொரு கையில் இந்தப் படம் கிடைத்திருப்பதில் மகிழ்ந்தேன். பனிடா சாந்து மற்றும் ப்ரியா ஆனந்த் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி.
என் அப்பா விக்ரம் பற்றிப் பேச வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், இந்தப் படத்துக்காக அவரது படங்களைத் தாண்டி மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் இருந்தார். என் அப்பா ஒரு நல்ல நடிகர் எனத் தெரியும். ஒரு நடிகராக என்னை இயக்கவில்லை, அப்பாவாக என்னை இயக்கினார். அவரில்லாமல் நானில்லை. நீங்கள் திரையில் பார்க்கும், என் பேச்சு, நடை, நடிப்பு என அனைத்துமே எங்க அப்பாதான். நீங்கள் பார்ப்பது அப்பாவுடைய இன்னொரு அவதாரம் தான். அவருக்கு 22 வயதிருந்தால் என்ன பண்ணியிருப்பாரோ, அதை என்னைப் பண்ண வைத்துள்ளார்.
என் அம்மாதான் இந்தப் பேச்சை எழுத உதவினார். என்னைத் தினமும் சாப்பிட வைத்து, மாத்திரைகள் சரியாகக் கொடுத்துப் பார்த்துக் கொள்வார். ஏதாவது பண்றா என்று திட்டுவார். என் அப்பா - அம்மாவால் மட்டுமே இங்கு இருக்கிறேன். என் அப்பாவை நான் பெருமைப்படுத்த நினைக்கிறேன். அதனால் மட்டுமே இந்தத் துறையில் இருக்கிறேன்" என்று பேசினார் துருவ் விக்ரம்.
துருவ் விக்ரம் பேச்சைப் பார்த்து மிகவும் கண் கலங்கினார் விக்ரம். மகன் பேச்சுக்குப் பிறகு மேடையேற வேண்டிய விக்ரம், மிகவும் உணர்வுவயப்பட்டு இருந்ததால், துருவ் விக்ரம் - பனிடா சாந்து - ப்ரியா ஆனந்த் மூவரையும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுக்க சில மணித்துளிகள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேடையேறி விக்ரம் பேசியது குறிப்பிடத்தக்கது.