சென்னை
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்துக்கு காலைக் காட்சி அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இப்படம் இந்த வாரம் வெளிவருகிறது. இப்படத்தின் தமிழக உரிமையைப் பெற்றுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம், ஏரியா வாரியாக விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்துவிட்டது. இதனால், திரையரங்குகள் ஒப்பந்தம் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 550 முதல் 600 திரையரங்குகள் வரை திரையிடப்படலாம் என்று தெரிகிறது.
‘பிகில்’ 2 மணி 58 நிமிடங்கள் ஓடக்கூடிய பெரிய படம். அதனால், காலைக் காட்சி அனுமதியும் கிடைத் தால் மட்டுமே அதிக காட்சிகள் திரையிட முடியும். இதற்கிடையே, திரையரங்குகளை 24 மணி நேரமும் திறந்துகொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ‘பிகில்’ படத் துக்கு காலைக் காட்சி திரையிட தமிழக அரசிடம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஏஜிஎஸ் நிர்வாக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இடைத்தேர்தல் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் மும்முரமாக இருந்ததால், அரசுத் தரப்பில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இன்று அல்லது நாளை கிடைத்துவிடும் என்ற எதிர் பார்ப்பில் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
இதுதொடர்பாகத் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, ஸ்பெஷல் ஷோவுக்கு அரசிடம் அனுமதி கேட்பதும், அவர்கள் தருவதும் வழக்கம்தான். தவிர, 24 மணி நேரமும் காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசும் தற்போது தெரிவித்துள்ளது. அதன் பேரில் அனுமதி கேட்டுள்ளோம்’’ என்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த மாதம் நடந்தது. அதில் பேசிய விஜய், ‘‘யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என திறமையை வைத்து முடிவு செய்யுங்கள். இங்கு கைது செய்ய வேண்டியவர்களை விட்டுவிட்டு, போஸ்டர் அச்சிட்டுக் கொடுத்த கடைக்காரரை கைது செய்கிறார்கள்’’ என்று அரசியல் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
‘‘சினிமா விழா நடத்த எப்படி அனுமதி வழங்கினீர்கள்?’’ என்று கேட்டு சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித் துறை நோட்டீஸும் அனுப்பியது. இந்த நிலையில், விஜய் படத்துக்கு காலைக் காட்சி அனுமதி உடனடியாக கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், எப்படியும் அதிகாலை காட்சி அனுமதி கிடைத்துவிடும் என்று பல திரையரங்குகளில் இப்போதே டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. அதி காலைக் காட்சி டிக்கெட் ரூ.1,500 வரையும், 8 மணி காட்சி டிக்கெட் ரூ.600 முதல் ரூ.800 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இது அரசு நிர்ணயித்ததைவிட அதிகம் என்பதால், இதுவும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
சில இடங்களில் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படத்தின் உரிமையைப் பெற்றிருப்பதால், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து தரும்படி திரையரங்க நிர்வாகத்தை அவர்கள் நிர்ப்பந்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே, ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என்று செல்வா என்ற உதவி இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதேபோல, தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் குறும்பட இயக்குநரான நந்தி சின்னிகுமார் ஒரு புகார் அளித்துள்ளார். ‘‘அகிலேஷ் பால் என்ற கால்பந்து வீரரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘ஸ்லம் சாக்கர்' என்ற திரைக் கதையைப் பதிவு செய்து வைத் திருந்தேன். இதையே ‘பிகில்’ என்ற பெயரில் அட்லீ படமாக்கியுள்ளார்’’ என்று புகாரில் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகள் சுற்றிவரும் நிலையில், சிக்கலின்றி படம் முதலில் வெளியாகட் டும் என்று படக்குழு அமைதிகாத்து வருகிறது.