தமிழ் சினிமா

‘எது என்னை இதைச் செய்ய வைத்தது? பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமல்ல’: இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுவாரஸ்யப் பகிர்வு

செய்திப்பிரிவு

தான் எவ்வாறு உடல் எடையைக் குறைத்தேன் என்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் 'நேர்கொண்ட பார்வை'. அந்தப் படத்தில் அஜித்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுக்கு நாயகியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்நிலையில் தனது உடல் பருமனாக இருந்த புகைப்படம் ஒன்றையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் எப்படி இவ்வாறு மாறினேன் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். அந்தப் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:

இடதுபக்க புகைப்படம் - பாலியில், அக்டோபர் 2014ல் எடுத்தது.

அது என் முதல் சர்வதேச விடுமுறை சுற்றுலா. என் சட்டத்துறையில் பணிபுரிய ஆரம்பித்து 1 வருடம் ஆகியிருந்தது. பலரும் கனவு காணும் ஒரு வேலையிலிருந்தேன். அந்த வேலையில் நல்ல சம்பளம், ஜாலியான வாழ்க்கை முறை, அதுவரை நான் செலவிடாத விஷயங்களிலெல்லாம் செலவிட ஆரம்பித்திருந்தேன். உணவு, உடை, வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, நீங்கள் என்னவெல்லாம் சொல்வீர்களோ அதிலெல்லாம்.

உடல் பருமனில் உச்சத்திலிருந்தேன்.மாதத்திற்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்யும் அளவு உற்சாகமே இருந்தது. யோசிக்காமல் மகிழ்ச்சியாக நிறைய சாப்பிட்டேன். என் தொடைகள் மற்றும் கைகளின் எடை அதிகமானதையும் பொருட்படுத்தாமல் நினைத்த உடையை அணிந்தேன், நான் கவர்ச்சியற்றவள் என்று நினைத்ததே இல்லை. மற்றவர்களை விடத் தாழ்வாக உணர்ந்ததில்லை.

சில சுய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அந்த உணர்வு அடங்கும் அளவுக்கு அது குறித்து ஏதும் செய்ய முடியாதவாறு சோம்பலாக இருந்தேன். இந்தப் புகைப்படம் எடுத்து சில காலம் பிறகு இந்த வயதிலேயே இப்படி இருக்கக்கூடாது என்று புரிந்தது. எனவே எனது அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் ஜிம்முக்கு சென்றேன். ட்ரெட்மில்லில் ஏறினேன். ஓடினேன். முதலில் 5 நிமிடங்கள், பிறகு 15, ஒரு கட்டத்தில் ஓய்வின்றி என்னால் 40 நிமிடங்கள் முழுமையாக ஓட முடிந்தது.

வலது பக்கம் இருக்கும் புகைப்படம் - டார்ஜிலிங், மே 2019ல் எடுத்தது.

ஐந்து வருடங்களும், 18 கிலோ எடையும் போன பிறகு. ஆம் கடுமையாகப் பயிற்சி செய்தேன். நிறைய நாட்கள் காலை 4.30 மணிக்கு எழுந்திருக்கிறேன். சில நாட்கள் இரண்டு முறை உடற்பயிற்சி செய்தேன். உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன். நான் இருப்பதிலேயே ஆரோக்கியமான நபராக இல்லையென்றாலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்கிறேன். உணவுப் பழக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அதை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும்.

கலோரி குறைபாடு என்றால் என்ன, வலிமைக்கான உடற்பயிற்சி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, உணவோடு சற்று ஆரோக்கியமற்ற உணவைப் பேணியுள்ளேன். அதனால், எனக்குப் பிடித்த உணவுக்கும், ஆரோக்கியமான உணவு - உடற்பயிற்சிக்கும் நடுவில் ஒரு சமநிலையான வாழ்க்கைமுறையை என்னால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் அதில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.

எது என்னை இதைச் செய்ய வைத்தது? எளிய பதில். நான் பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மட்டுமே லட்சியத்தின் முடிவாக வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நன்றாக இருப்பதற்கு எல்லையே இல்லை. எப்போதுமே உங்கள் வயிறு இன்னும் கொஞ்சம் குறைவாக இருக்கலாம் என்று நினைப்பீர்கள். இன்னொரு பெண், ஒரு உடையில், உங்களை விட என்றுமே நன்றாகத்தான் தெரிவார்.

சமூக ஊடகங்கள் உங்களுக்குள் இருக்கும் அச்சத்துக்கு இரை போட்டுக்கொண்டே இருக்கும். அது உங்களைப் பரிதாபமாக ஆக்கும். அதனால் அதிகநேரம் வேலை செய்யும் உங்கள் இதயத்துக்காகச் செய்யுங்கள், கடைசி வரை உங்கள் எடையைத் தாங்கும் உங்கள் மூட்டுகளுக்காகச் செய்யுங்கள், உங்களுக்காகப் போராடும், தானாகவே குணமாகிக்கொள்ளும் உங்கள் உடலுக்காகச் செய்யுங்கள். நோயற்ற வாழ்வுக்காக, இரவில் நல்ல உறக்கத்துக்காக. உங்களுக்காகச் செய்யுங்கள். சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தச் செய்யாதீர்கள்.

இவ்வாறு தன் இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT