‘ஆடை’ இந்தி ரீமேக்கில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், இரண்டாவதாக இயக்கிய படம் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். விவேக் பிரசன்னா, விஜே ரம்யா, சரித்ரன், டி.எம்.கார்த்திக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பரபரப்பு கிளம்பியது. காரணம், அதில் அமலா பாலின் புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் வரவேற்பு பெற்றது.
அதேசமயம், சில எதிர்ப்புகளும் கிளம்பின. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்தப் படம் குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா? என இயக்குநர் ரத்னகுமாரிடம் கேள்வி எழுப்பினார். இயக்குநரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், இந்த நேரடி விவாதம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கணா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘ஆடை’ படம் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.