கோப்புப் படம் 
தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவை இயக்கும் ஹரி: உறுதி செய்த கார்த்தி

செய்திப்பிரிவு

சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் இந்தப் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினி படத்தை இயக்க சிவா ஒப்பந்தமாகிவிட்டதால், சூர்யா படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், சூர்யாவின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்தது. பாலா அல்லது ஹரி இருவரில் ஒருவராக இருக்கும் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள 'கைதி' தெலுங்குப் பதிப்பை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கார்த்தி பேசிக் கொண்டிருக்கும்போது, சூர்யா... சூர்யா எனப் பல ரசிகர்கள் கத்தத் தொடங்கினார்.

அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கார்த்தி, "சூர்யா அண்ணன் நன்றாக இருக்கிறார். அடுத்ததாக நடிக்கவுள்ள ஹரி படத்துக்காகத் தயாராகி வருகிறார். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பார்" என்று பேசினார் கார்த்தி. இதன் மூலம் சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் சூர்யா - ஹரி கூட்டணி இணைந்து 'ஆறு', 'வேல்', 'சிங்கம்’, 'சிங்கம் 2', 'சிங்கம் 3' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது 6-வது முறையாக இக்கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT