ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் செளகார் ஜானகி நடித்து வருகிறார்.
சந்தானம் நடிப்பில் வெளியான 'ஏ1' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதைக்களத்துக்காக சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் சந்தானம். இதில் அவருக்கு நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்து வருகிறார். கமல் இயக்கி நடித்த 'ஹேராம்' படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்காமலிருந்தார். பின்பு 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் தனது மறுவருகையைத் தொடங்கினார் செளகார் ஜானகி.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படம் அவருக்கு 400-வது படமாகும். அவரை இயக்கிய அனுபவம் குறித்து ஆர்.கண்ணன், "ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அதேபோல் என் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவைப் படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
70 ஆண்டுகளாக பல்வேறு முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குறையவில்லை. மேலும், அவரது நினைவுத் திறன் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் கண்ணன்.