கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு, புதிதாக வீடு வழங்கியுள்ளார் ரஜினி.
2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் தஞ்சாவூர், கோடியக்கரை, தலைஞாயிறு, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை கஜா புயல் தாக்கியது. இதில் பல பகுதிகளிலிருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தன. மேலும் பலரது வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. இதனால் பல குடும்பங்கள் வீடுகளின்றித் தவித்தன.
அந்த சமயத்தில் அரசியல் கட்சியினர், நடிகர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவருமே அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதற்காக ரஜினியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், இதர ஊர்களிலிருந்தும் பொருட்களும், பண உதவிகளும் வந்தன. இதனை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான அடிப்படை உதவிகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட, அதே சமயத்தில் ஏழ்மையான குடும்பத்தினரைத் தேர்வு செய்தது ரஜினி மக்கள் மன்றம். அதில் 10 குடும்பங்களுக்குத் தனது சொந்த செலவில் வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்தார் ரஜினி. இதற்கான பூமி பூஜை மார்ச் மாதத்தில் போடப்பட்டது.
நாகப்பட்டினம் ரஜினி மக்கள் மன்றச் செயலாளரான டி.எல்.ராஜேஷ்வரன் இதற்கான பணிகளைக் கவனித்து வந்தார். தற்போது வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால், சம்பந்தப்பட்ட 10 குடும்பத்தினரிடம் வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார் ரஜினி.
இதற்காக 10 குடும்பத்தினரும் ரஜினி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த விதத்தைக் கேட்டறிந்தார் ரஜினி. பின்பு வீடுகளுக்கான குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் அடங்கிய பையுடன் சாவியைக் கொடுத்தார்.