வி.ராம்ஜி
‘’ ‘உதிரிப்பூக்கள்’ என்று டைட்டில் வைச்சது இளையராஜாதான். இந்தப் படத்துக்கு பிரமாண்டமாக எந்தச் செலவும் செய்யவில்லை’’ என்று அந்தப் படத்தின் உதவி இயக்குநரும் பின்னாளில் இயக்குநருமாக ஆன ‘யார்’கண்ணன் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.
1979ம் ஆண்டு, அக்டோபர் 19ம் தேதி ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் வெளியானது. மகேந்திரன் இயக்கிய இந்தப் படம் இன்றுவரை மிக முக்கியத்துவமான படம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன.
இந்தப் படத்தில் உதவி இயக்குநராக, இப்போது இயக்குநராகவும் நடிகராகவும் திகழும் ‘யார்’ கண்ணன் பணியாற்றினார்.
இந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து, ‘யார்’ கண்ணன் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
கதை விவாதம், வசனம் எழுதுவது, படப்பிடிப்புக்குச் செல்வது எனறு எந்த வேலைகளுக்கும் பிரமாண்டமாகச் செலவுசெய்யவில்லை மகேந்திரன் சார். அப்படிச் செலவு செய்வதையும் அவர் விரும்பமாட்டார்.
’உதிரிப்பூக்கள்’ படம் முழுக்க மேட்டுப்பாளையம் மற்றும் பவானி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் மட்டுமே நடந்தது. நாங்களும் அங்கே சாதாரண ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். ‘அழகிய கண்ணே’ பாடலுக்கு மட்டும் ஊட்டிக்குச் சென்று படமாக்கினோம்.அதுவும் மொத்த யூனிட்டும் செல்லவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே பாடலைப் படம் பிடிக்கச் சென்றோம்.
இந்தப் படத்தின் டைட்டில் வைக்கப்பட்ட தருணம் மறக்கவே முடியாதது. ‘சிற்றன்னை’ என்கிற புதுமைப்பித்தனின் கதையை மூலக்கருவாகக் கொண்டுதான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. விஜிபியில் டிஸ்கஷன், கம்போஸிங் என நடந்துகொண்டிருக்கிறது.
டைரக்டர் மகேந்திரன் சார், இளையராஜா சார் என எல்லோரும் அங்கே இருக்கிறோம். விஜிபியில், இளையராஜாவும் மகேந்திரன் சாரும் நடந்துகொண்டிருக்க, நான் பின்னால் நடந்துகொண்டிருக்கிறேன். அதுவொரு பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும்.
அப்போது, கதையைப் பற்றி, ‘சிற்றன்னை’ பற்றி பேசிக்கொண்டே வந்தார்கள். அந்த சமயத்தில், ‘உதிரிப்பூக்கள்’ என்று டைட்டிலை இளையராஜாதான் சொன்னார். மகேந்திரன் சாரும் அந்தத் தலைப்பில் முழு திருப்தி அடைந்தார்.
பொதுவாகவே, நல்ல விஷயம் யாரிடம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற குணம் மகேந்திரன் சாருக்கு உண்டு. ஓர் உதவி இயக்குநர் சொல்வதையே, சரியாக ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவரின் நல்ல மனதைப் புரிந்துகொள்ளலாம்.
பல படங்களுக்கு நூறு இருநூறு டைட்டில்கள் கூட யோசித்திருக்கிறார் மகேந்திரன். அப்படி டைட்டில் ஓகே செய்யப்பட்டால், உடனே என்னைத்தான் எழுதச் சொல்லுவார். நான் ஸ்கெட்ச்சில் டிசைனெல்லாம் செய்து எழுதிக் காட்டுவேன். பிறகு அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையிருந்தால், டிசைனர் பரணியிடம் அதைச் சொல்லி, டைட்டில் டிசைன் செய்யச் சொல்லுவார்.
இவ்வாறு ‘யார்’ கண்ணன் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு ‘யார்’ கண்ணன் பிரத்யேகமாக அளித்த வீடியோ பேட்டியைக் காண :