தமிழ் சினிமா

என்னை உறுதியான ஆளாக மாற்றிய சம்பவம்: மஞ்சிமா மோகன் பாசிட்டிவ் பதிவு

செய்திப்பிரிவு

காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் மஞ்சிமா மோகன். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது 'பாரீஸ் பாரீஸ்' படத்தின் மலையாள ரீமேக்கில் கங்கணா ரணாவத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மஞ்சிமா மோகன். தமிழில் 'களத்தில் சந்திப்போம்', 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சில நாட்கள் முன்பு எதிர்பாராதவிதமாக இரும்புக் கதவில் இடித்துக்கொண்டதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனை சென்ற போது, சின்ன அடி தான் என்று மருந்து வைத்துக் கட்டியுள்ளனர். ஆனால், சின்ன அளவிலான இரும்புத் துகள்கள் காலிலேயே இருந்ததால், பெரும் சிக்கலாகியுள்ளது. இதனால் சிறு அளவிலான அறுவை சிகிச்சை செய்து, வீட்டில் ஓய்வில் இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "சில வாரங்களுக்கு முன் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்தது. அடுத்த ஒரு மாதம் என் காலில் கட்டுடன் படுக்கையில் கழித்தேன். இதற்கு முன், உன் வாழ்க்கையில் சந்தித்த கடினமான சூழல் என்று யாராவது கேட்டால், அதிர்ஷ்டவசமாக எதுவும் இல்லை என்பதுதான் என் பதிலாக இருக்கும். ஆனால் இனி என்னிடம் வேறொரு பதில் இருக்கிறது.

முதல் சில நாட்கள் எளிதாக இல்லை என்றாலும், விரைவில் நான் என் காலில் நின்று எனக்குப் பிடித்தமான என் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இந்தக் காலகட்டத்தில் மற்றவர்களிடம் பேசாமல், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். நான் இந்த சந்தர்ப்பத்தை எனக்கான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் எனக்குத் தேவைப்பட்டுள்ளது என்பது இப்போது எனக்குப் புரிகிறது.

நான் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் இந்த சூழல் என்னை மாற்றிவிட்டது. என்னை உறுதியான ஆளாக மாற்றியிருக்கிறது என்பதை நான் சொல்லும்போது அதன் முழு அர்த்தத்தில் சொல்கிறேன். பெரியவர்கள் சொல்வது போல, "எல்லாம் ஒரு காரணமாகத்தான் நடக்கும். இதுவும் கடந்து போகும்" என்று தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

SCROLL FOR NEXT