தமிழ் சினிமா

‘அழகி’ பார்ட்-2 வருமா?: தங்கர் பச்சான் பதில்

செய்திப்பிரிவு

‘அழகி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் தங்கர் பச்சான்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி மூவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், மோனிகா, விவேக், பாண்டு, சாயாஜி ஷிண்டே, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார். காதலைக் கொண்டாடிய இந்தப் படத்தை, இன்றளவும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இரண்டாம் பாகம் அதிகரித்து வரும் நிலையில், ‘அழகி’ படத்தின் இரண்டாம் பாகமும் வருமா? என தங்கர் பச்சானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“ ‘அழகி’ மாதிரியான படங்களைப் பார்க்க மக்கள் இப்போது தயாராக இல்லை. காதல் என்றால் என்னவென்று தெரியாத தலைமுறை தற்போது உருவாகிவிட்டது. காதல் உணர்வே இல்லாமல், நேரடியாகக் காமத்துக்குப் போய்விட்டனர்.

‘அழகி’ படத்தின் கதையை 1983-ம் ஆண்டே எழுதிவிட்டேன். இதை, ஒரு தொடர் மாதிரி எடுக்கச் சொன்னார் இளையராஜா. அதன் முன்கதையாகத்தான் ‘அழகி’ எடுத்தோம். இப்போது ‘அழகி’ இரண்டாம் பாகத்தின் கதை தயாராக இருக்கிறது. பார்த்திபன் பையனுக்கு 27 வயதில் இருந்து கதை தொடங்கும்.

‘அழகி’ இரண்டாம் பாகம் எடுக்க தயாரிப்பாளர் தயாராத்தான் இருக்கார். இன்னனும் நந்திதா தாஸிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லோரும் அவரவர்கள் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு வரவேண்டும். ஆனால், தற்போதுள்ள தலைமுறை ‘அழகி’ இரண்டாம் பாகத்தைப் புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம்தான்” எனப் பதில் அளித்துள்ளார் தங்கர் பச்சான்.

தன் மகன் விஜித் பச்சானை வைத்து தற்போது ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

SCROLL FOR NEXT