அஜித் - ஹெச்.வினோத் இணையும் புதிய படத்துக்கு 'வலிமை' எனத் தலைப்பிடப்பட்டு, படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்துக்கான கதை மற்றும் திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. எப்போது படப்பூஜை என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று (அக்டோபர் 18) படப்பூஜை நடைபெறவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகின.
தற்போது, படப்பூஜையுடன் கூடிய புகைப்படங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். 'வலிமை' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. டிசம்பரில் படப்பிடிப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். தற்போது அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'வலிமை' தலைப்பின் பின்னணி
'வலிமை' படத்தின் தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமாரிடம் இருந்துள்ளது. அவரிடமிருந்து தலைப்பைப் பெற அஜித் - ஹெச்.வினோத் படக்குழு கடிதம் மூலம் அனுமதி கோரியது. தீவிரமான அஜித் ரசிகரான செல்வகுமார், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உடனடியாக அனுமதி கொடுத்து கடிதம் கொடுத்துவிட்டார். இதற்குப் பிறகே 'வலிமை' தலைப்பின் உரிமை படக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.