தமிழ் சினிமா

'தர்பார்' அப்டேட்: ஆதித்யா அருணாச்சலமாக ரஜினி

செய்திப்பிரிவு

'தர்பார்' படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் நவம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். முழுக்க மும்பையிலே இந்தப் படத்தின் கதைக்களத்தை அமைத்ததால், அங்கேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாஸின் அப்பா பெயர். 1997-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'அருணாச்சலம்' திரைப்படம் வெளியானது நினைவுகூரத்தக்கது.

'தர்பார்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

SCROLL FOR NEXT