யூ டியூப் பக்கத்தில் இந்திய மொழிப் படங்களின் ட்ரெய்லர்களில், 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் அதிக லைக்ஸ் பெற்று முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். அக்டோபர் 25-ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. யூ டியூப் சேனலில் குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், குறைந்த நேரத்தில் அதிக லைக்ஸ் என சாதனைகள் ஒவ்வொன்றாகப் படைத்து வந்தது.
இந்தியாவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ஷாரூக் கான் நடிப்பில் வெளியான 'ஜீரோ' படம் பெற்றது. அதற்கு 2 மில்லியன் லைக்ஸ் இருந்தது. அந்தச் சாதனையை விரைவில் 'பிகில்' முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்தச் சாதனையை எளிதாகக் கடந்துள்ளது 'பிகில்'.
'பிகில்' படத்தின் ட்ரெய்லர் 2.1 மில்லியன் லைக்ஸ் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், யூ டியூப் சேனலில் இந்தியாவிலிருந்து வெளியான படங்களின் ட்ரெய்லர்களில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரெய்லர் என்ற இமாலயச் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'பிகில்'.
உலக அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' ஹாலிவுட் படம் தன்வசம் வைத்துள்ளது. இந்தப் படம் 3.5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.