ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்தின் பணிகள் பூஜையுடன் நாளை (அக்டோபர் 18) முதல் தொடங்கவுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணைந்து படம் பண்ணுவதை உறுதிப்படுத்தினார்கள். இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
உடனடியாக படப்பிடிப்புக்குச் செல்வார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானாலும், படக்குழு அமைதி காத்தது. கதை மற்றும் திரைக்கதை உள்ளிட்ட அனைத்தையும் சரியாக முடிவு செய்து படப்பிடிப்பு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, அஜித் - ஹெச்.வினோத் சந்தித்து கதையை முடிவு செய்து, அதற்குத் திரைக்கதையை இறுதி செய்து முடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடிகர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டது. யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்பட்டாலும், இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்படும் அன்றே அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே அஜித், ஷீரடிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசித்து வந்துள்ளார். இதனால், எப்போது வேண்டுமானாலும் படத்தின் பூஜையிருக்கும் எனத் தகவல் வெளியானது. அதன்படி நாளை (அக்டோபர் 18) படப்பூஜை நடைபெறவுள்ளது. எப்போதுமே அஜித், படத்தின் பூஜையில் கலந்து கொள்வதில்லை என்பதால், இதர தொழில்நுட்பக் குழுவினருடன் சிறிய அளவில் பூஜை செய்து படத்தின் பணிகள் தொடங்கப்படுகின்றன.
இதனால், நாளை (அக்டோபர் 18) அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.