விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததால், எப்போது வெளியீடு என்ற எதிர்பார்ப்பு உண்டானது. தீபாவளி வெளியீடு என்றாலும், எந்தத் தேதியில் வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அக்டோபர் 25-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்தப் படம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் கதை தொடர்பாக, தெலுங்கிலும் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டுமே வரும் வாரத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது முதல் பிரதி எடுக்கும் பணிகளில் துரிதமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு.
'பிகில்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.