தமிழ் சினிமா

'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து சத்யராஜ் விலகியது ஏன்?

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து சத்யராஜ் விலகியது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் நடிக்கும் அனைவரையுமே பெரிய அளவில் முடி, தாடி வளர்க்கச் சொல்லியுள்ளார் மணிரத்னம். இதில் உள்ள கதாபாத்திரங்களுக்கான லுக் எப்படியிருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

இதில் 'பெரிய பழுவேட்டரையர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சத்யராஜிடம்தான் படக்குழு பேசியது. கதாபாத்திர வடிவமைப்பு உள்ளிட்டவை அனைத்துமே பிடித்திருந்தாலும், படக்குழுவினர் வைத்த வேண்டுகோளைப் பரிசீலித்து இதில் நடிக்கவில்லை என்று விலகிவிட்டார்.

டிசம்பர் மாதத்திலிருந்து தேதிகள் வேண்டும், 6 மாதத்துக்கு வேறு எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகக் கூடாது, இந்தப் படத்தின் கெட்டப்பில் வேறு எந்தவொரு படத்திலும் நடிக்கக் கூடாது உள்ளிட்ட பல வேண்டுகோள்களை வைத்துள்ளது படக்குழு. ஆனால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு முன்னணி நாயகர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ்.

இந்தவொரு படத்துக்காக மற்ற படங்களின் படப்பிடிப்பு எதுவுமே பாதித்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். தற்போது இவருக்குப் பதிலாக 'பெரிய பழுவேட்டரையர்' கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பொன்னியின் செல்வன்' முதற்கட்டப் படப்பிடிப்பை தாய்லாந்தில் தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதில் கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று, படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு முடிவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT