அசோக் செல்வன் நடித்து வரும் 'ஓ மை கடவுளே' படத்தில், சிறு கதாபாத்திரத்தில் கடவுளாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'கூட்டத்தில் ஒருத்தன்' படத்துக்குப் பிறகு தனியாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் அசோக் செல்வன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.
இதில் நாயகியாக ரித்திகா சிங், முக்கியக் கதாபாத்திரங்களில் சாரா, வாணி போஜன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் டீஸர் இன்று (அக்டோபர் 17) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தில் கடவுளாக முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சிறு கதாபாத்திரம்தான் என்றாலும், படத்தின் கதைக்கு அதுதான் மாற்றமாக இருக்கும் என்கிறது படக்குழு.
இந்தப் படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வழங்க அசோக் செல்வன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.