ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த படத்துக்கு 'பெண்குயின்' எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘மகாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு தெலுங்கு மற்றும் இந்திப் பட வாய்ப்புகள் வரவே அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'சர்கார்' படத்துக்குப் பிறகு புதிதாக எந்தவொரு படத்திலுமே ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார்.
புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, தமிழில் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்பை முழுமையாக கொடைக்கானலைச் சுற்றியே படமாக்கியுள்ளனர்.
இன்று (அக்டோபர் 17) கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈஸ்வர் கார்த்திக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவித்தது படக்குழு. அதன்படி 'பெண்குயின்' எனப் படத்துக்கு தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் போஸ்டரின்படி பார்த்தால், இந்தப் படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.