தமிழ் சினிமா

விஜய்யை பின்னுக்குத் தள்ள ஷாரூக் கானை ஆதரிக்கும் அஜித் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

விஜய்யை முதலிடத்துக்கு வராமல் தடுக்க, ஷாரூக் கானை ஆதரித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

பாலிவுட், கோலிவுட்டில் வெளியாகும் ட்ரெய்லர்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆவது ஒன்றும் புதிதல்ல. ரசிகர்களின் ஆர்வம் அப்படி இருக்கிறது. ஆனால் சமீபத்தில் 2018-ல் வெளியான ஷாரூக்கின் 'ஜீரோ' படத்தின் ட்ரெய்லருக்கு திடீரென லைக்குகளும், பார்வைகளும் ஏறியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுவும் படம் வெளியான ஒரு வருடம் கழித்து.

ஷாரூக் கான், காத்ரீனா கைஃப் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கிய 'ஜீரோ', ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. ஏமாற்றத்தையே தந்தது. இருந்தும் அதன் ட்ரெய்லர் திடீரென பலரால் பார்க்கப்பட்டதற்கான காரணம் நடிகர் விஜய் என்றால் நம்ப முடிகிறதா?

விஜய் நடிப்பில் 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. மூன்றே நாட்களில், 1.9 மில்லியன் லைக்குகளுடன் (இப்போது 2 மில்லியன்) யூடியூப் இந்தியாவில், அதிக லைக்குகள் பெற்ற ட்ரெய்லர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை 'பிகில்' பெற்றுள்ளது. முதலிடத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் கடந்து ’ஜீரோ’ ட்ரெய்லர் முதலிடத்தில் உள்ளது. அந்த இடத்தை ’பிகில்’ பெறக்கூடாது என்பதற்காக அஜித் ரசிகர்கள் ’ஜீரோ’ ட்ரெய்லரை முதலிடத்திலேயே இருக்க வைக்கப் பாடுபடுகின்றனர்.

தல- தளபதி ரசிகர் சண்டை இணையத்துக்குப் புதிதில்லை என்றாலும் அஜித் ரசிகர்களின் இந்தச் செயல் இதுவரை மற்ற ரசிகர்கள் செய்யாதது, யோசிக்காதது.

இதில் இருக்கும் நகை முரண் என்னவென்றால், ’பிகில்’ படத்தின் இயக்குநர் அட்லீதான் ஷாரூக் கானின் அடுத்த படத்தைப் பாலிவுட்டில் இயக்குகிறார். ’பிகில்’ ட்ரெய்லரைப் பகிர்ந்துள்ள ஷாரூக் கான், தனது ’சக் தே இந்தியா’வுக்கு ஊக்கமருந்து கொடுத்து இன்னும் சுவையூட்டியது போல ட்ரெய்லர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் தற்போது 'பிகில்' மற்றும் 'ஜீரோ’ படங்களின் ட்ரெய்லர்கள் 2 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. எது 2.1 மில்லியன் லைக்ஸ் காட்டப் போகிறது என்பது நாளை (அக்டோபர் 17) தெரியவரும்.

SCROLL FOR NEXT