புதியவர்களுக்கு வாய்ப்பு மனிதம் காரணமாகச் செய்கிறேன். பாவம் பார்ப்பதால் அல்ல என்று இமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் கிராமம் சார்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இமான். இவர் இசையமைத்த 'விஸ்வாசம்' பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க இமானை அணுகி வருகிறார்கள். ரஜினி - சிவா இணையும் படத்துக்குக் கூட இவர்தான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஒவ்வொரு படத்திலும் புதுமுகப் பாடகர்களுக்கும் வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இமான். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் யாரும் அவர்களின் சுய மரியாதையை இழக்க விட மாட்டேன். என் அலுவலகத்தில் காத்திருக்க வைக்க மாட்டேன். எனது வார்த்தை, சிந்தனை, செயல்களால் காயப்படுத்த மாட்டேன். வாய்ப்பு கேட்பவர்களிடம் என் இமெயில் முகவரியைத் தருவேன். அவர்கள் செய்ததை எனக்கு அனுப்பச் சொல்வேன். அது எனக்குப் பிடித்திருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு தருவேன்" என்று தெரிவித்துள்ளார் இமான்.
சில வருடங்களுக்கு முன், ஒரு மலேசியத் தமிழர், ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் இமானிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவர் சமீபத்தில் இமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்' படத்தில் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் பார்வைக் குறைபாடு உள்ள திருமூர்த்தி பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இதைப் பார்த்த இமான், அவருடைய விவரங்களைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசியுள்ளார். மேலும், திருமூர்த்தி பாட வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இம்மாதக் கடைசியில் அவர் இமான் இசையில் ஒரு பாடலைப் பாடுவார் எனத் தெரிகிறது.
கடந்த வாரம் இமான் பங்கேற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமூர்த்தியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போதுதான் இமான் திருமூர்த்தியை நேரில் பார்த்தார். கடந்த சில வருடங்களில் கிட்டத்தட்ட 140 புதிய திறமைகளை இமான் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் இதை, பாவப்பட்டுச் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இமான் கூறுகையில், "என் இதயத்தில் இருக்கும் மனிதம் காரணமாகச் செய்கிறேன். பாவம் பார்ப்பதால் அல்ல. எனது வேலை காதுகளுக்கானது. அதனால் ஒரு திறமையைக் கண்டறிய நான் எதையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குப் பார்வை இருக்கிறதோ இல்லையோ, என்ன நிறத்தில் இருக்கிறாரோ, எந்த மொழி பேசுகிறாரோ, ஏழையா, பணக்காரனோ, எந்த மதம், எந்த சாதி எதுவும் எனக்கு முக்கியமில்லை" என்று இமான் தனது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.