தமிழ் சினிமா

'தர்பார்' வெற்றிக்குப் பிரார்த்தனை: உத்தரகாண்ட் சென்ற ரஜினிகாந்த்

செய்திப்பிரிவு

'தர்பார்' பட வெற்றிக்காக கேதர்நாத், பத்ரிநாத் பகுதிகளில் உள்ள கோயில்களில் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக உத்தரகாண்டுக்கு சென்று வருகிறார் ரஜினி. ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று வரும் அளவுக்கு ரஜினிக்கு அந்த இடத்துடன் ஆழ்ந்த பந்தம் உள்ளது என்றும் அந்த சூழலில் அவருக்கு அமைதி கிடைப்பதாகவும் ரஜினிகாந்துக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

ஞாயிறு இரவு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரிஷிகேஷ் வந்திறங்கினார் ரஜினிகாந்த். தயானந்த் ஆசிரமத்தில் தங்கி, மாலை கங்கா ஆரத்தியைப் பார்த்தார். தனது குருவின் சமாதியில் தியானம் செய்தார். பின் தனியாகத் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

கங்கை நதிக்கரையில் தயானந்த ஆசிரமம் அமைந்துள்ளது. வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் படிக்க ஒரு தனித்துவமான மையம் உள்ளது. இங்கு பாடங்கள் ஆங்கிலத்திலேயே எடுக்கப்படுவதால்தான் இந்த இடம் தனித்துவம் பெறுகிறது. சிவபெருமானுக்காக இங்கொரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

60-களில் சுவாமி தயானந்த சரஸ்வதியால் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. ஆசிரமத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் நம்மிடம் பேசுகையில், "இங்கு வந்தால் ரஜினிகாந்த் நிறைய பக்தியுடன் இருப்பார். இங்கு வரும்போதெல்லாம் அவர் ஒரு குறிப்பிட்ட அறையில் தங்குவார். ஆசிரமத்தில் தரும் உணவை உண்பார். எப்போதும் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார்" என்றார்.

திங்கட்கிழமை காலை வெளியே சென்று நடந்து விட்டு வந்த ரஜினி பின் தன் மகளுடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். அங்கு கோயில் அதிகாரிகள் அவரை வரவேற்க, இரண்டு கோயில்களிலும் பிரார்த்தனை செய்தார். பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, " 'தர்பார்' படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்" என்றார்.

கடந்த வருடமும் '2.0' வெளியீட்டுக்கு முன் ரஜினி இந்தக் கோயில்களுக்கு வந்திருந்தார். 'பேட்ட' படப்பிடிப்பின்போது முசோரியில் தங்கியிருந்த ரஜினி, டெஹ்ராடூனில் இருக்கும் சுவாமிராம் ஹிமாலயன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். சுவாமிராமின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

ஐ.ஏ.என்.எஸ்

SCROLL FOR NEXT