தமிழ் சினிமா

'காவிரி கூக்குரல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து விமர்சனம்: தமன்னா விளக்கம்

செய்திப்பிரிவு

'காவிரி கூக்குரல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து விமர்சனம் எழுந்தது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜகி வாசுதேவ் 'காவிரி கூக்குரல்' என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் காவிரி நதியைச் சுத்தப்படுத்துவது, அதன் இரு புறங்களிலும் மரம் நடுவது என பல்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு இந்தி திரையுலகம் தொடங்கி பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் நிதியுதவியும் செய்து வருகிறார்கள்.

'காவிரி கூக்குரல்' முன்னெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே, இதற்கு ஆதரவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார் தமன்னா. ஆனால், 'காவிரி கூக்குரல்' முன்னெடுப்பு குறித்து சூழலியலாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களும் நிலவுகிறது.

இந்த விமர்சனங்கள் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, "எனக்கு அரசியல் அறிவு குறைவு. அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. காவிரியோ அல்லது வேறு நதியோ, நாங்கள் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற நினைக்கிறோம். நம்மிடம் குறிப்பிட்ட அளவு நீரே இருக்கிறது.

மரங்களை நாம் வெட்டும் வேகமும், இயற்கையை நாம் நடத்தும் விதமும் கண்டிப்பாக நமக்கு உதவாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அதைச் செய்யச் சிறந்த வழி இந்த சேதத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. சத்குரு இதில் உதவ நினைக்கிறார். என்னால் முடிந்த குறைந்தபட்ச செயல் அதற்கு ஆதரவு தெரிவிப்பது.

நான் ஒரு நட்சத்திரமாவதற்கு முன், நான் இந்த நாட்டின் பிரஜை. ஒரு தனி நபர். சில சமயங்களில் நம் ஊடகங்களும், மக்களும் ஏன் இந்த மொத்த உலகும் கூட, ஒருவருக்கு ஒரு விஷயத்தை ஆதரிக்கவோ, ஆதரிக்காமல் இருக்கவோ தனிப்பட்ட சுதந்திரம் உண்டு என்பதை மறந்துவிடுகின்றன. ஆதரிக்க எனக்கான காரணங்கள் என்னிடம் உள்ளன. அதை ஆதரிப்பது குறித்தோ, ஆதரிக்காமல் இருப்பது குறித்தோ யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

SCROLL FOR NEXT