விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தைச் சீனாவிலும் வெளியிட, ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், யூ-டியூப் பக்கத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளது.
தீபாவளி வெளியீடு என்பதால், இறுதிக்கட்டப் பணிகள் முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்துவிட்டதாகவும், விரைவில் என்ன சான்றிதழ் என்பது தெரியவரும்.
இந்நிலையில், படத்துக்குத் திரையரங்குகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளை இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மேலும், இதர மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியீட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'பிகில்' படத்தைச் சீனாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, "இன்னும் சில மாதங்களில் 'பிகில்' திரைப்படத்தைச் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். 'பிகில்’ படத்தைச் சீனாவுக்கு எடுத்துச் செல்வதுதான் எங்கள் அடுத்த பெரிய முயற்சி.
‘தங்கல்’ போன்ற விளையாட்டு பற்றிய படத்தையும், ’மாம்’ போன்ற பெண்களை மையமாகக் கொண்ட படத்தையும் ஏற்றுக்கொண்ட சந்தை அது. இந்த இரண்டும் இருக்கும் ’பிகில்’ அவர்களுக்குப் பிடிக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
மேலும், ’பிகில்’ பட வெளியீடு, கால்பந்து பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வர சரியான நேரமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். சென்னை சிடி எஃப்சி ’பிகில்’ கால்பந்து தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 64 அணிகள், நாக் அவுட் முறையில் விளையாடுவார்கள். வேளச்சேரி டிகி-டகாவில் அக்டோபர் 10-ம் தேதி யும் 20-ம் தேதியும் இந்த தொடர் நடக்கிறது.
மேலும் ஏஜிஎஸ் நிறுவனம், ஸ்கை ஈஸ்போர்ட்ஸுடன் இணைந்து, ’ஃபிஃபா 20 பிகில் சாம்பியன்ஷிப்’ கேமிங் போட்டியை நடத்தவுள்ளது. ஆர்க்நெமிசிஸ் கேமிங்கில் அக்டோபர் 17 முதல் 20 வரை இந்த போட்டி நடக்கவுள்ளது.