தமிழ் சினிமா

’தளபதி 64’ படம் தொடர்பாக வதந்தி: படக்குழு மறுப்பு

செய்திப்பிரிவு

'தளபதி 64' படம் தொடர்பாக வெளியான வதந்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மன வருத்தம் ஏற்பட்டதால், சேவியர் பிரிட்டோ இதன் தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியானது.

'தளபதி 64' படத்தைத் தயாரித்து வரும் எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் மறுப்பு தெரிவித்துள்ளது. "உண்மையில்லாத எதிர்மறையான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கனிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நன்றி" என்று தெரிவித்துள்ளது.

முதல்கட்டப் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகின்றனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பில் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT