தமிழ் சினிமா

'தலைவர் 168' அப்டேட்: மீண்டும் இணையும் 'விஸ்வாசம்' குழுவினர்

செய்திப்பிரிவு

ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 168' படத்தில், 'விஸ்வாசம்' படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களே பணிபுரியவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது.

'விஸ்வாசம்' படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளதாக அந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்தது.

இதனிடையே, 'தர்பார்' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவும் சிவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏனென்றால், 'விஸ்வாசம்' படம் பார்த்துவிட்டு சிவாவை அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்தக் கூட்டணி படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து ரஜினி - சிவா படத்தை உறுதி செய்து அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

சிவா இயக்கும் படம் என்றாலே, ஒளிப்பதிவாளராக வெற்றியும், எடிட்டராக ரூபனும் பணிபுரிவார்கள். 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது ரஜினி படத்துக்கும் இதே கூட்டணியைத் தொடர சிவா முடிவு செய்துள்ளார்.

மேலும், 'விஸ்வாசம்' படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால் ரஜினி படத்துக்கும் இமானை இசையமைக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா. இவர்களுக்கான ஒப்பந்தம் போடப்பட்டு விட்டாலும், விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பரில் தனது பிறந்த நாளுக்கு முன்பாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினி. இதற்கான நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT