தமிழ் சினிமா

குடும்பத்துடன் 10 நாள் இமயமலை பயணம்: ரிஷிகேஷில் சுவாமி தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்; ஹெலிகாப்டரில் நாளை கேதார்நாத் செல்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை

இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் நேற்று ரிஷிகேஷ் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும், இமயமலை சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னர் உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் இமயமலை செல்லவில்லை. 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இமயமலைக்குச் சென்று வந்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டும் இமயமலை செல்வதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென திட்டமிட்ட ரஜினி, குடும்பத்தினருடன் நேற்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென்றடைந்த அவர், அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ரிஷிகேஷிலேயே இரவு தங்கினார்.

கேதார்நாத் அருகே உள்ள ஃபட்டா என்ற இடத்துக்கு ரஜினி இன்று (14-ம் தேதி) ஹெலிகாப்டரில் செல்கிறார். ஹெலிகாப்டரிலேயே சுற்றி அப்பகுதியில் சில இடங்களைப் பார்வையிடும் ரஜினி, இன்று இரவு ஃபட்டாவில் தங்குகிறார்.

நாளை (15-ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு கேதார்நாத் செல்ல திட்டமிட்டுள்ளார். கேதார்நாத் வரும் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கேதார்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படு கிறது.

தொடர்ந்து பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ள ரஜினி, தான் கட்டியுள்ள துவாராஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கவும் திட்டமிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT