சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள 'அடுத்த சாட்டை' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடுத்த சாட்டை'. சமுத்திரக்கனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. இது தொடர்பாக 'அடுத்த சாட்டை' படத்தின் போஸ்டரில் லிப்ரா நிறுவனத்தில் லோகோ இடம்பெற்றது.
திடீரென்று ஆகஸ்ட் 27-ம் தேதி சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் ”நேர்மை இல்லை.” என்று பதிவிட்டார். எதை மனதில் வைத்து இந்தப் பதிவு என்று பலரும் கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர். சில மணித்துளிகளில் "லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதனால், பட வெளியீடு தள்ளிப் போனது. தற்போது 'அடுத்த சாட்டை' படத்தின் வெளியீட்டு உரிமையை பி.ரங்கநாதன் கைப்பற்றியுள்ளார். தீபாவளிக்குப் பெரிய முதலீடு படங்கள் வெளியாவதால், நவம்பர் 15-ம் தேதி 'அடுத்த சாட்டை' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.