தமிழ் சினிமா

'பிகில்' ட்ரெய்லர் கொண்டாட்டம்: அனுமதி மறுத்த காவல்துறை

செய்திப்பிரிவு

'பிகில்' ட்ரெய்லர் கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகம் ரசிகர்களை வெளியேறச் சொல்லியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எப்போதுமே விஜய் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் போது, தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பட்டும். விஜய் ரசிகர்கள் இதில் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த தருணத்தில் விஜய் நடித்த பல்வேறு படங்களிலிருந்து பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

'பிகில்' ட்ரெய்லருக்கும் இதே போன்றதொரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது கோயம்பேடு ரோகிணி திரையரங்க நிர்வாகம். மாலை 5 மணி முதலே கொண்டாட்டம் இருக்கும் என்றும், இதற்காக பல்வேறு நிகழ்வுகள் விஜய் ரசிகர்களுக்காகக் காத்திருப்பதாகவும், இந்தக் கொண்டாட்டத்துக்கு காரில் வர வேண்டாம் என்றும், கார் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்றும் அறிவித்தது ரோகிணி திரையரங்க நிர்வாகம்.

ஆனால், இந்தக் கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரோகிணி திரையரங்க நிர்வாகத்தின் செயல் இயக்குநர் ரேவ்நாத் சரண், "பல்வேறு காரணங்கள் மற்றும் அனுமதி ஆகிய காரணங்களால் இந்தக் கொண்டாட்டம் நடைபெறாது. காலையிலிருந்து காவல் நிலையத்தில் தான் இருக்கிறேன்.

என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் முடியவில்லை. மன்னிக்கவும். 2 நிமிடத்துக்குக் கூட அனுமதி கோரினேன். ஆனால் முடியவில்லை. அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். விஜய் ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்புங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரோகிணி திரையரங்க ட்விட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "ரோகிணி திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு நிறையச் செலவு பண்ணினோம். 10 நாட்களாக இதற்காக நிறையத் திட்டமிட்டோம்.

திட்டமிட்டபடி LED ஸ்கிரீன் உள்ளிட்ட அனைத்துமே வந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. மதியம் சாப்பிடாமல் என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தேன். ஒரு பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாகக் கலைத்துச் சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வந்து அமைதியாகச் சென்றுள்ளீர்கள். காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி. " என்று தெரிவித்துள்ளார் ரேவ்நாத் சரண்.

SCROLL FOR NEXT