ஜெயலலிதாவாக நடிப்பது எனக்குப் பதற்றமாகத்தான் இருக்கிறது என்று கோவையில் கங்கனா ரணவத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து, படமொன்றை இயக்கவுள்ளார் இயக்குநர் விஜய். 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் மைசூரில் தொடங்கவுள்ளது. இதற்காகத் தமிழ் கற்பது, பரதநாட்டியம் கற்பது என முழுவீச்சில் தயாராகி வருகிறார் கங்கனா ரணவத். சமீபத்தில் கோயம்புத்தூரில் 'Cauvery Calling' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கங்கனா ரணவத்.
அந்நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையாளர் மத்தியில் கங்கனா ரணவத் பேசிய போது ”தமிழில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் கண்டிப்பாக கற்கவேண்டும். எந்த குறுக்குவழியும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. தோற்றங்களைச் சரியாகக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நான்கு கட்டங்களில் நான்கு விதமான தோற்றங்கள் உள்ளன. 16 வயதில் அவர் நடிக்க ஆரம்பித்த போது, பின் 20, 30, 40 என அவர் முதல்வர் ஆனது வரை. அதுவரை தான் முதல் பாகம்.
இது சரியாக வந்தால் நாங்கள் அடுத்த பாகம் எடுப்போம். அது வெறும் அரசியல் பயணத்தைப் பற்றியதாக இருக்கும். முதல் பாகம் அவர் எப்படி உச்ச நட்சத்திரம் ஆனார், எம்ஜிஆருடனான அவரது உறவு, அன்று தமிழகத்தின் சமூக அரசியல் சூழல் எப்படி இருந்தது ஆகியவற்றைப் பற்றித்தான். தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இந்த பாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஜெயலலிதாவாக நடிப்பது எனக்குப் பதற்றமாகத்தான் இருக்கிறது. அவர் மிகவும் வலிமையானவர். அவர் ஆளுமைக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர் கான்வண்டில் படித்தவர். நன்றாக ஆங்கிலம் பேசுபவர். உயர்ந்த பரதநாட்டிய நடனக்கலைஞர். இது அனைத்திலும் நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதாபாத்திரத்துக்குத் தேவையான நியாயத்தைச் செய்வேன் என்று நம்புகிறேன்.
அவரும் அவர் வாழ்க்கையில் நிறையப் போராடியிருக்கிறார். அவர் வாழ்க்கையில் நடந்தவற்றுக்கும் என் வாழ்க்கையில் நடந்தவற்றுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவர் அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். எனக்கு அரசியல் திட்டமே இல்லை. அவர் அவர் வாழ்க்கையை அவர் நினைத்தபடி வாழ்ந்தவர்.
நான் எனது பயோபிக் எடுக்கலாம் என்று நினைக்கும்போது இந்தக் கதையைப் படித்தேன். அவரும் என்னைப் போல நடுத்தரவர்க்க குடும்பத்திலிருந்து வந்தவர். அவரைப் போலவே நானும் 16 வயதில் நடிக்க ஆரம்பித்தேன். ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை எதிர்கொண்டார். எனது பயணமும் அப்படியே இருந்திருக்கிறது. எனது இயக்குநர் விஜய் தான் நான் சந்தித்ததிலேயே மிகவும் கனிவானவர். என் தயாரிப்பாளர்களும் கனிவானவர்கள். மென்மையானவர்கள்.
விஜய் இதற்கு முன்னரே என்னைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். 'தலைவி' படத்துக்காக அவர் என்னைப் பார்த்தபோது, ’ஏன் எனக்குத் தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்புகள் வரவில்லை’ என்று கேட்டேன். அதற்கு அவர், ’மறந்துவிட்டீர்களா நான் உங்களிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னைத் திரும்ப அழைக்கவில்லை’ என்றார். நான் 7-8 வருடங்களுக்கு முன் என்ன மனநிலையிலிருந்தேன் எனத் தெரியவில்லை. சுத்தமாக நினைவில்லை. அப்போது நான் செய்த தவறுகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் இப்போது திரும்ப வந்துவிட்டேன்” என்று பேசியுள்ளார் கங்கனா ரணவத்.