தமிழ் சினிமா

காதலித்து வருகிறேன்; குடும்பத்தினருக்குத் தெரியும் - கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்புதல்

செய்திப்பிரிவு

தான் காதலித்து வருவதாகவும், அது தனது குடும்பத்தினருக்குத் தெரியும் என்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது மகளான கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் 'ஹலோ' படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ச்சியாக 'சித்திரலகிரி', 'ரணரங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ஹீரோ' படத்தின் மூலம் அறிமுகமாகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு நாயகியாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி அங்கும் நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்போது தான் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் மோகன்லாலின் மகன் ப்ரணவ்வை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் உள்ளனர்.

இந்தச் செய்தித் தொடர்பாக கல்யாணி ப்ரியதர்ஷன் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒருவரைக் காதலித்து வருகிறேன். அவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. என் குடும்பத்தினர் எல்லோருக்கும் அவரைத் தெரியும்.

ஆனால் அவர் யார் என்பதை இப்போது வெளியுலகுக்குச் சொல்லப்போவதில்லை. அதனால் என் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் இருப்பது போலத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

SCROLL FOR NEXT