வி.ராம்ஜி
79ம் ஆண்டில், ‘அழியாத கோலங்கள்’ படமும் ‘புதிய வார்ப்புகள்’ படமும் சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தன.
1979ம் ஆண்டு எழுபதுகளின் நிறைவு வருடமாக 1979ம் ஆண்டு இருந்தது. அது, கமலும் ரஜினியும் மளமளவென வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம். இதேசமயத்தில், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நடிகர்களும் வந்து வெற்றிப்படங்களைத் தந்துகொண்டிருந்தார்கள்.
ஜெய்சங்கரின் ‘ஒரே வானம் ஒரே பூமி’ முதலான படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படம் இந்த வருடம்தான் வெளியானது. ரஜினி, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ’அன்னை ஓர் ஆலயம்’, ’நான் வாழவைப்பேன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என படங்கள் வெற்றி பெற்றன.
கமல்ஹாசனுக்கு, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நீலமலர்கள்’, ‘மங்களவாத்தியம்’, ’கல்யாணராமன்’, ‘நீயா’ என பல படங்கள் ஹிட்டடித்தன. சிவாஜியின் 200வது படமான ‘திரிசூலம்’ இந்த வருடம்தான் ரிலீசனது. ’ஷோபா’வின் நடிப்புக்கு விருது கிடைத்த ‘பசி’ திரைப்படமும் சரிதாவின் நடிப்பிலும் பாலசந்தர் இயக்கத்திலும் வந்து புதுமை படைத்த ‘நூல்வேலி’யும் இந்த வருடம்தான் வெளியாகின.
சிவகுமாரின் ’ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது அவருக்கு 100வது படம். அதேபோல் ஐ.வி.சசியின் ‘பகலில் ஓர் இரவு’ திரைப்படமும் அதன்பாடல்களும் பேசப்பட்டன.
ரஜினியின் ‘தர்மயுத்தம்’ படமும் எம்.ஏ.காஜாவின் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இந்த சமயத்தில், இதே வருடத்தில், பாக்யராஜுக்கு மூன்று படங்கள் வந்தன. பாக்யராஜ் வசனம் எழுத, பாரதிராஜா இயக்கத்தில் பாக்யராஜ் முதன்முதலாக ஹீரோவாக நடித்த ‘புதிய வார்ப்புகள்’ வெளியானது. பாக்யராஜின் திரைக்கதை வசனத்தில், பிவி.பாலகுரு இயக்கத்தில், ‘கன்னிப்பருவத்திலே’ படம் வெளியானது. இந்தப் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார் பாக்யராஜ். இதன் பின்னர், தானே இயக்கி சுதாகரை நாயகனாக்கி, இரண்டாவது ஹீரோவாக நடித்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் என மூன்று படங்கள் வெளியாகின.
இந்த வருடத்தில்தான் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ மூலம் கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு இசையமைத்தார்.
’இனிக்கும் இளமை’, ‘அகல்விளக்கு’ என விஜயகாந்த் நடிக்கத் தொடங்கிய வருடம் இது. இயக்குநர் மகேந்திரன், ‘முள்ளும் மலரும்’ படத்துக்குப் பிறகு இரண்டாவது படமாக ‘உதிரிப்பூக்கள்’ வந்தது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நூறு படங்களின் பட்டியலில், ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்குத் தனியிடம் உண்டு.
ஸ்ரீதரின்’அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் பாடல்கள் வெகுவாகப் பேசப்பட்டன. இந்த வருடத்தில், ‘புதிய வார்ப்புகள்’ படத்தை அடுத்து பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’ படம் வெளியாகி, அதுவொரு உணர்வை , தாக்கத்தை ஏற்படுத்தியது.
79ம் ஆண்டின், மிகப்பிரமாண்டமான வெற்றி இரண்டு படங்களுக்குக் கிடைத்தன. இயக்குநர் பாலுமகேந்திரா ‘கோகிலா’ எனும் கன்னடப்படத்தை இயக்கினார். 2வது படமாக, ‘அழியாத கோலங்கள்’ படத்தைக் கொடுத்தார். தமிழில் இதுதான் இவரின் முதல் படம். ‘கோகிலா’ படத்தின் நாயகி ஷோபாதான் இதிலும் நாயகி. இதில் நாயகனாக நடித்த கமல், ‘அழியாத கோலங்கள்’ படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணினார்.
பிரதாப் நடித்த இந்தப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.சென்னையில் 600 நாட்களைக் கடந்து ஓடியது. பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவையும் இயக்கத்தையும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள் ரசிகர்கள். பாராட்டித் தீர்த்தார்கள்.
இதேபோல், பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட வெற்றிகளைத் தொடர்ந்து, ‘புதிய வார்ப்புகள்’ படத்தை எடுத்தார். பாக்யராஜ் ஹீரோ. ரதி ஹீரோயின். வழக்கம் போல் கிராமத்து சப்ஜெக்ட். ஆனால் வழக்கமான சப்ஜெக்ட் அல்ல. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருந்தன.
79ம் ஆண்டில், ரசிகர்களால் ‘அழியாத கோலங்கள்’ படமும் ‘புதிய வார்ப்புகள்’ படமும் அதிகம் கொண்டாடப்பட்டன. பேசப்பட்டன. சூப்பர்டூப்பர் ஹிட்டடித்தன.