தமிழ் சினிமா

'புத்தும் புது காலை' பாடலை நீக்கியது ஏன்? - ரகசியம் உடைக்கும் பாரதிராஜா

செய்திப்பிரிவு

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் 'புத்தும் புது காலை' பாடலை நீக்கியது ஏன் என்பதற்கான காரணத்தை முதல் முறையாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'அலைகள் ஓய்வதில்லை'. 1981-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் பாடல்களில் 'புத்தும் புது காலை' என்ற பாடல் மிகவும் பிரபலம். ஆனால், படத்தில் இப்பாடல் இடம்பெறவில்லை. படம் வெளியான சமயத்தில் பாடல் மிகவும் பிரபலமானாலும், காட்சியமைப்பாக இந்தப் பாடல் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2014-ம் ஆண்டு வெளியான 'மேகா' படத்தில் முதன்முறையாக இந்தப் பாடலுக்குக் காட்சி வடிவம் கொடுத்து வெளியிட்டார்கள். இந்நிலையில் 'புத்தம் புது காலை' பாடல் ஏன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெறவில்லை என்பது குறித்து இயக்குநர் பாரதிராஜா தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது 'என் இனிய தமிழ் மக்களே' யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பாரதிராஜா பேசியிருப்பதாவது:

'' 'புத்தம் புது காலை' பாடலை எடுத்து முடித்து படத்தில் தேவையான இடத்தில் வைத்தாகிவிட்டது. நானும் என் உதவி இயக்குநர்களும் முழு படத்தையும் அமர்ந்து பார்த்தோம். அனைத்தும் சரியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு குறை இருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு எடிட்டரை எழுப்பி, உதவி இயக்குநர்கள் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லி நானே அமர்ந்து முழு படத்தையும் இன்னொரு முறை எடிட் செய்தேன்.

படத்தை உதவி இயக்குநர்களுக்குப் போட்டுக் காண்பித்தேன். பார்த்துவிட்டு இப்போது நன்றாக வந்திருக்கிறது. ஆனால் 'புத்தம் புது காலை' பாடல் எங்கே? என்று கேட்டார்கள். அந்தப் பாடல்தான் இந்தப் படத்தையே கெடுத்திருக்கிறது என்று அவர்களிடம் கூறினேன். பாடல் மிகவும் அருமையான பாடல்தான். ஆனால் அதைப் படத்திலிருந்து நீக்கவில்லை என்றால் அந்த இடம் தொய்வடைந்து விடும். அதனால் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை.

அதை சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'மேகா' படத்தில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் 'ஓம்' படத்துக்காக 7 அற்புதமான பாடல்களை லண்டன், துருக்கி, இமாச்சல் உள்ளிட்ட இடங்களில் படமாக்கி வைத்திருந்தோம். ஆனால் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தைப் போலவே இதிலும் ஏதோ ஒரு குறை. அதனால், இதிலும் ஒரு பாடலை நீக்கினோம்''.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT