தமிழ் சினிமா

ராதா மோகன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் 'பொம்மை'?

செய்திப்பிரிவு

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படத்துக்கு 'பொம்மை' என்ற தலைப்பு பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'மான்ஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்து நல்ல கதைக்காகக் காத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இறுதியாக ராதா மோகன் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, அதைப் படமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து, தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தக் கூட்டணிதான் 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்து நடித்தது.

ராதாமோகன் - எஸ்.ஜே. சூர்யா படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் படத்துக்கு 'பொம்மை' எனத் தலைப்பு வைக்க படக்குழு ஆலோசனை செய்து வருகிறது. 1964-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பொம்மை' என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைப்புக்கான உரிமம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். எடிட்டராக ஆண்டனி பணிபுரியும் இந்தப் படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT