தமிழ் சினிமா

முதல் பார்வை: அருவம்

உதிரன்

உணவுக் கலப்படத்துக்கு எதிராகக் களம் இறங்கும் அதிகாரி, எதிரிகளைப் பழிவாங்கினால் அதுவே 'அருவம்'.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிகிறார் சித்தார்த். டீ, தண்ணீர், சாம்பார் சாதம், பிரெட் என்று எதில் எங்கு கலப்படம் நடந்தாலும் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட கடைக்கு, நிறுவனத்துக்கு சீல் வைக்கிறார். இதனால் டீக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவரில் இருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வரைக்கும் பல எதிரிகளைச் சம்பாதிக்கிறார். இதனிடையே ஆசிரியையாகப் பணிபுரியும் கேத்ரீன் தெரஸாவைக் காதலிக்கிறார். காதலியைத் தாண்டி வேலையை அதிகம் நேசிக்கும் சித்தார்த் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து நேர்கிறது. இந்த சூழலில் சித்தார்த் என்ன செய்கிறார், எதிரிகள் என்ன ஆகிறார்கள், காதலியைக் கரம் பிடித்தாரா, அவரின் கனவு நிறைவேறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

உருவமில்லாத அருவத்தை மையமாகக் கொண்டு திகிலூட்டக்கூடிய படம் ஒன்றைக் கொடுக்க இயக்குநர் சாய் சேகர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அது திகிலாக இல்லாமல் நல்ல மெசேஜும் சொல்லாமல் ஏனோதானோவென்று கடந்து போகிறது. நல்ல மெசேஜ் சொன்னால் நல்ல படமாகிவிடும் என்ற இயக்குநரின் நம்பிக்கை ரசிகர்களிடத்தில் சுத்தமாக எடுபடவில்லை. அழுத்தமான காட்சிகளோ, திரைக்கதைக்கான வலுவான காரணங்களோ இல்லாமல் படம் நிதான கதியில் செல்கிறது.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக வரும் சித்தார்த் விறைப்பும் முறைப்புமாகவே வந்து போகிறார். அவரின் உடல்மொழி போலீஸ் அதிகாரியையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. எந்தக் காட்சியிலும் அவரை ரிலாக்ஸாகப் பார்க்கவே முடியவில்லை. முதல் பாதி முழுக்க சில காட்சிகளில் மட்டும் சித்தார்த் வந்து போகிறார். சொல்லப்போனால் படத்தின் நீட்டிக்கப்பட்ட கவுரவக் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளாரோ என்று நினைப்பு வந்துவிடுகிறது. நல்லவேளை, இரண்டாம் பாதியில் ஈடுகட்டி அந்தக் குறையைப் போக்குகிறார். டீக்கடை ரெய்டு காட்சியில் மட்டும் சித்தார்த் தன் முத்திரையைப் பதிக்கிறார்.

அன்னை தெரஸா அளவுக்கு சேவை செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று உள்ளத்தால், குணத்தால் உயர்ந்து நிற்கிறார் கேத்ரின் தெரஸா. ஆனால், அவரின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை. வாசனையை நுகரும் உணர்வை இழந்தவர் கேத்ரின் என்பது திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் அம்சம். ஆனால், இயக்குநர் அதனை சரியாகப் பயன்படுத்தாது பெருங்குறை.

ஜாலியான அப்பா என்கிற பெயரில் நரேன் நடித்திருக்கும் விதம் ரசிக்கும்படி இல்லை. மயில்சாமி, மனோபாலா, பருத்திவீரன் சுஜாதா, இளங்கோ குமாரவேல் என படத்தில் அத்தனை பேரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். சதீஷின் நகைச்சுவையில் சிரிக்க முடியவில்லை. ஸ்டண்ட் சில்வா, மதுசூதனராவ், கபீர் சிங், நந்தகுமார் ஆகியோர் வழக்கமான வில்லன்களாக வந்து டெம்ப்ளேட்டாக நடித்துவிட்டுச் செல்கிறார்கள்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஒரே ஆறுதல். தமன் படம் முழுக்க இரைச்சலையே கொடுத்திருக்கிறார். ப்ரவீன் கே.எல். தயங்காமல் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். குறிப்பாக படத்தின் தொடக்கக் காட்சி. எடிட்டிங் முறையையும் மாற்றி சத்துணவு முட்டையால் பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பிரச்சினையை முதலில் சொல்லியிருந்தால் படத்தின் தன்மை மாறியிருக்கும்.

ஒருவனின் செயல்களை வைத்து நல்ல ஆத்மா என்று முடிவுக்கு வராமல் அவரின் சாம்பலைக் கடலில் கரைத்ததால்தான் நல்ல ஆத்மா ஆனது என்று சொல்வதெல்லாம் அபத்த நகைச்சுவை. ஷங்கர் - முருகதாஸ் பட மாதிரிக் காட்சிகள், 'காஞ்சனா' போன்ற படங்களின் ரெஃபரன்ஸ் என படத்தின் திரைக்கதையும் தெளிவில்லாமல் இருக்கிறது.

''கேன்சர்ங்கிறது வியாதி அல்ல வியாபாரம்'', ''ஆண்டவன் படைச்ச உயிருக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் பண்ணுது'', ''கலப்படம் இல்லாத உணவு என் கனவு'' போன்ற வசனங்கள் படத்தின் ஆதார அம்சத்துக்கு வலுவூட்டுகின்றன. இதனைப் படம் முழுவதும் அழுத்தமான காட்சிகள் மூலம் கடத்தியிருந்தால் 'அருவம்' ஆச்சர்யப்பட வைத்திருக்கும்.

SCROLL FOR NEXT