தமிழ் சினிமா

'தல 60' படத்துக்குப் போலி விளம்பரங்கள்: போனி கபூர் தரப்பு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சமூக வலைதளத்தில் அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்துக்குப் போலி விளம்பரங்கள் வெளியாகி வருவதற்கு போனி கபூர் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய படத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

இதன் கதை விவாதம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, தற்போது நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு குறித்து பல்வேறு விளம்பரங்கள் இணையத்தில் வெளியானதாகத் தெரிகிறது. இதற்குப் படக்குழுவினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போனி கபூர் தரப்பில் அவரின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எந்தவொரு விளம்பரத்தையுமே அளிக்கவில்லை. அவ்வாறு வெளியாகியுள்ள விளம்பரங்களுக்கு எங்கள் நிறுவனமோ, போனிகபூரோ பொறுப்பேற்க முடியாது. அந்த விளம்பரங்களுக்கும் போனி கபூருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று தெரிவித்துள்ளனர்.

டிசம்பரில் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனால் இது குறித்த பல்வேறு செய்திகள், விளம்பரங்கள் வெளியான வண்ணமுள்ளன. அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, படப்பூஜை நடைபெறும் அன்றே வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT