தமிழ் சினிமா

உங்கள் அனைவரையும் இன்னமும் பெருமைப்படுத்துவேன்: லாஸ்லியா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

உங்கள் அனைவரையும் இன்னமும் பெருமைப்படுத்துவேன் என்று லாஸ்லியா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சி முடிவுற்றுள்ளது. இதில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை சாண்டியும், 3-வது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். வீட்டிற்குள் கடும் போட்டி நிலவினாலும், தற்போது அனைவரும் நண்பர்களாகவே வலம் வருகிறார்கள்.

இயக்குநர் சேரனின் வீட்டுக்கு லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி அகர்வால், ஷெரின் உள்ளிட்டோர் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், சாண்டி, கவின், தர்ஷன் மற்றும் முகின் ராவ் ஆகியோர் நட்பாகக் கலாட்டா செய்யும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்தவொரு பதிவையும் வெளியிடாமல் இருந்தார் லாஸ்லியா. இன்று (அக்டோபர் 10) முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் லாஸ்லியா கூறியிருப்பதாவது:

முதலில் நீங்கள் அனைவரும் தந்த நிபந்தனையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறவேண்டும். நன்றி என்பது சிறிய வார்த்தை. உங்கள் அனைவருக்கும் போதுமானதல்ல. உங்கள் அனைவருக்கும் என் அன்பு உரித்தாகட்டும். நீங்கள் எனக்குத் தந்த ஆதரவு என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மிக்க நன்றி.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இயங்காமல் இருப்பதற்கும், யார் செய்திகளுக்கும் பதிலளிக்காமல் இருப்பதற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரையும் இன்னமும் பெருமைப்படுத்துவேன், சந்தோஷப்படுத்துவேன். சத்தியம் செய்கிறேன் நண்பர்களே.

இவ்வாறு லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT