என் திருமண வதந்தி கதைகளைப் படமாகத் தயாரிக்கத் தயாராகவுள்ளதாக நடிகை தமன்னா கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, காளி வெங்கட், யோகி பாபு, சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பெட்ரோமாக்ஸ்'. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
'சைரா நரசிம்மா ரெட்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படம் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், அவரது திருமண வதந்தி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு தமன்னா, "என் திருமணம் குறித்து நிறையச் செய்திகள் வெளியாகிறது. அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. சிலர் கற்பனையாக நிறைய எழுதுகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
அவர்கள் தினமும் எழுதும் கற்பனைக் கதையை என்னிடம் கொடுத்தால், அதைப் படமாகத் தயாரிக்கத் தயாராகவுள்ளேன். இப்போதைக்கு என் திருமணத்துக்கு அவசரமில்லை. திருமணம் செய்தே ஆக வேண்டும் என யாரும் என்னை வற்புறுத்தவில்லை. தொடர்ந்து சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்" என்று தெரிவித்துள்ளார் தமன்னா.