தமிழ் சினிமா

தொடர்ச்சியா ட்ரெண்ட் ஆகுறோம்ல: வடிவேலு குஷி

செய்திப்பிரிவு

இண்டர்நெட்ல தொடர்ச்சியா ட்ரெண்ட் ஆகுறோம்ல என்று தன் பிறந்த நாள் தொடர்பான ட்ரெண்ட் குறித்து வடிவேலு மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பான பிரச்சினை ஒருவழியாக முற்றுப் பெற்றுள்ளது. இதனால் வடிவேலுக்குப் பதிலாக வேறொரு நாயகனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வடிவேலு இந்தப் பிரச்சினையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளார்.

விரைவில் அவரது புதிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனிடையே சமூக வலைதளத்தில் அவ்வப்போது வடிவேலு தொடர்பான மீம்ஸ்கள், பதிவுகள் ட்ரெண்ட்டாகி வரும். சமீபத்தில் கூட வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரன் உலகளவில் ட்ரெண்ட்டாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 10) வடிவேலுவின் பிறந்த நாள் என்று இணையத்தில் மீம்ஸ் உருவாக்குபவர்கள், வடிவேலுவின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனால் #HappyBirthdayVadivelu, #HBDVadivelu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் காலையிலிருந்தே ட்ரெண்ட்டாகின.

இது தொடர்பாக வடிவேலுவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "அப்படியா தம்பி.. காலைலருந்து பலரும் வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க. எல்லார்கிட்டயும் செப்டம்பர் 12-ம் தேதி தான் எனக்குப் பிறந்த நாள்னு சொல்லிட்டு இருக்கேன். எப்படியோ இண்டர்நெட்ல தொடர்ச்சியாக ட்ரெண்ட்டாகிட்டு இருக்கோம்ல. சந்தோஷமா இருக்கேன்" என்று பதிலளித்தார் வடிவேலு

SCROLL FOR NEXT